அர்ச்சகர்களும், ஆலய பாதுகாப்பும்

 

இந்து மதத்தின் வாழும் அடையாளமாக நம்மிடையே விளங்குபவை நம் கோவில்கள் ஆகும். உலகத்தின் எல்லா மதங்களுக்கும் வழிப்பாட்டுத் தலங்கள் இதன் அடிப்படையிலேயே இருந்தாலும் அவை எல்லாவற்றிலிருந்தும் நம் கோவில்கள் சில பிரத்யேக அம்சங்களைப் பெற்றிருக்கின்றன.

சர்ச், பள்ளிவாசல் போன்ற பிற மதங்களின் வழிப்பாட்டுத் தலங்கள் கட்டடக் கலையிலும் நடைமுறை செயல்பாடுகளிலும் கோவில்களைக் காட்டிலும் நாகரிகமாகவும் காலத்திற்கு ஏற்ற நவீன அம்சங்களை அதிகமாகக் கொண்டிருந்தாலும் அவற்றை இட்டுச்செல்லும் பாதிரியார்களும், உல்மாக்களும் கோவில்களின் அர்ச்சகர்களோடு ஒப்பிடுகையில் மிகவும் வேறுபட்டுக் காணப்படுகிறார்கள்.

நம் மத பாரம்பரியபடி சிவன் கோவில்களில் குருக்களும் வைஷ்ணவ கோவில்களில் பட்டாச்சாரியார்களும் மற்ற கிராமக் கோவில்களில் பூசாரிகளும் நெடுங்காலமாக விக்ரக ஆராதனை விஷயங்களை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலம்வரை இது பரம்பரை பாரம்பரியத்திலேயே தொடர்ந்து வந்தது.

பொருளாதார அடிப்படையில் மிகுந்த சிறப்புகளைத் தராவிடினும் பெருமை, மதிப்பு போன்ற உணர்வு சார்ந்த விஷயங்களில் மிகுந்த உயர்வு பெற்று உன்னத நிலையில் இருந்தவரை பரம்பரை வழக்கத்தை கடைப்பிடிப்பதிலும் அதைக் காப்பாற்றி வருவதிலும் சம்பந்தப்பட்ட சகலருக்கும் விருப்பம் இருந்தது. தட்டில் விழும் காசும் குறைவு, எட்டி நின்று வணங்கும் பக்தர்களிடமும் மதிப்பு இல்லை என்ற கெட்ட காலம் வந்து நிலைமை வெட்ட வெளிச்சம் ஆகிவிட்ட பின்பு திட்டங்கள் எதுவும் சரி ஆகாமல் எல்லாம் திசை திரும்பிவிட்டன.

கோவில் நடைமுறை மற்றும் அதன் சார்புடைய வருமானங்கள் எல்லாவற்றிலும் அதன் நாயகர்களாக விளங்கிய அர்ச்சகர்களும் பங்குபெறும் பாங்கு இருந்தவரை புனிதம் என்ற பூக்களால் ஆலயங்கள் அர்ச்சிக்கப்பட்டன. கர்ப்ப கிரஹத்துக்குள் சென்று கடவுளைத் தொட்டு அர்ச்சனை ஆராதனை செய்யும் ஒற்றை உரிமை மட்டுமே உங்களுக்கு உண்டு. சுற்றி கோவில்களை உள்ள கடை கட்டடங்கள் வாடகை பற்றியும் பயிர் நிலங்கள் கோவில்களின்

பராம்பரிப்பிலிருந்து வரும் பணம் காசுகள் பற்றியும் பேசுவதற்கு அர்ச்சகர் நீங்கள் அருகதையற்றவர்கள். அர்ச்சனை சீட்டு அபிஷேக ஆராதனை கட்டணங்களும் ஆலய நிர்வாகம் மட்டுமே நிர்ணயம் செய்து அதை நிர்வகிக்கும் உரிமை கொள்ளும்: ஆகம சாத்திரங்கள் எல்லாம் கற்றுத் தன் வாழ்நாள் முழுவதும் ஆலய வழிபாட்டு செயல்களிலேயே கழித்து ஓய்ந்து உடல்தளர்ந்து மாண்டுபோனாலும் எந்த மகத்தான நிதிஉதவியும் கிடையாது.

மேற்சொன்ன விதங்களில் அர்ச்சகர்களின் நிலை மெல்ல, மெல்லத் தேய்ந்து மிடுக்கு இழந்த பின்பு தமிழக ஆலயங்கள் எல்லாம் கழகத் தம்பிகளின் கூடாரம் ஆகியது. குத்தகை என்ற பெயரில் அத்தை, சித்தப்பா, மாமா என்று எத்தனையோ உறவுகள் சொல்லி நெருங்கும் எத்தர்கள், ஏமாற்றுக்கார இடைத்தரகர்கள் சித்தம் மகிழும்படியாகச் சிறந்த கோவிலடி மனைப் பகுதிகளைக் குறைந்த விலைக்குக் கொடுத்துவிட்டு குளிர்காயும் கொடூரர்கள் வசம் கோவில்கள் சென்றன. அறங்காவலர்கள் என்ற பெயருக்கு புது அர்த்தம் தந்து நல்லவர்களைப் புறம்தள்ளி நிறம்மாறி நீர்த்துப்போன நீலப்பட்டாக நின்றன கோவில் நடைமுறைகள்.

ஒரு சில குறிப்பிட்ட கோவில்கள் தவிர்த்துப் பெரும்பான்மையான தமிழகக் கோவில்கள் நித்திய பூஜைக்கே படும்பாடு சிந்திக்கத் தக்கது. பழநி, திருச்செந்தூர், மதுரை போன்ற மிகச்சில பெரிய கோவில்கள் அல்லாது மற்ற பெரும்பான்மையான கோவில்கள் தங்கள் வரவுக்கும், செலவுக்கும் எந்தத் தொடர்பும் இன்றி வாடும் நிலையை நாம் எடுத்துச் சொல்வதைக் காட்டிலும் மிகத்தெளிவாகக் கீழ்க்கண்ட அட்டவணை எடுத்துக்காட்டுகிறது.

தமிழகத்தில் உள்ள மொத்த அரசு சார் ஆலயங்கள் மொத்தம் - 34,491.

அவற்றின் வருமான விவரம் (1979 - 80இன் படி)

1. ஆண்டு வருமானம் ரூ 200க்கும் கீழே உள்ள ஆலயங்கள் 8368

2. ஆண்டு வருமானம் ரூ 200க்கும் மேல் ஆனால், ரூ 2000க்கு கீழ் உள்ள ஆலயங்கள் 17,687

3. ஆண்டு வருமானம் ரூ 2000க்கும் மேல் ஆனால், ரூ 10,000க்கு கீழ் உள்ள ஆலயங்கள் 6,509

4. ஆண்டு வருமானம் ரூ 10,000க்கும் மேல் ஆனால், ரூ 10,000க்கு கீழ் உள்ள ஆலயங்கள் 1,469

5. ஆண்டு வருமானம் ரூ 50,000க்கும் மேல் ஆனால், ரூ 1,00,000க்கு கீழ் உள்ள ஆலயங்கள் 166

6. ஆண்டு வருமானம் ரூ 1,00,000க்கு மேல் உள்ள ஆலயங்கள் 202

மேற்கண்ட அட்டவணையின் கடைசி நான்கு பிரிவுகள் மட்டுமே அதாவது 8346 ஆலயங்கள் மட்டுமே வரவு செலவு தணிக்கை செய்யப்படுபவை ஆகும்.

நெடுங்காலமாகக் கணக்கற்ற பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட விளைநிலங்களையும் வீட்டுமனைகளையும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி இடையில் வந்த அறங்காவலர்கள் சொத்துகளை விற்றும் குறைந்த குத்தகைக்கு விட்டும் செய்த அடாவடி அக்ரமங்கள் அர்ச்சகர்களின் நிலையை மேலும் பரிதாபத்துக்குரியவர்களா ஆக்கியது. பத்திரிகைகளில் வந்த இத்தகைய விவரங்களைச் சற்றுப் பார்ப்போம்.

1. 1979ஆம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 40 கிரவுண்ட் நிலம். கிரவுணட்க்கு ரூ. 4 (நான்கு மட்டும்) என்ற கணக்கில் குத்தகைக்கு விடப்பட்டது.

2. அதே ஆண்டு மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்துக்குச் சொந்தமான 116 கிரவுண்ட் இடத்தை ரூ. 4 லட்சத்திற்கு விற்பதற்கும். புரசை கங்காதீஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான 147 கிரவுண்ட் இடத்தை ரூ 5 லட்சத்திற்கு விற்கவும் இந்து அறநிலையத்துறை முடிவு செய்து அம்முயற்சி கடுமையாக எதிர்க்கப்பட்டது.

இனாம்தாரி சட்டம் ஒழிக்கப்பட்டதின் தொடர்பாகக் கோவில் நிலங்களில் 30 வருடங்களுக்கு மேல் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்பவர்கள் அந்நிலங்களின் சொந்தக்காரர்கள் ஆக்கப்பட்டார்கள். அந்நாளைய நிலவரப்படி அவர்கள் கொடுக்கவேண்டிய 12 வருட குத்தகை பணமான ரூ 2஝ கோடி ரூபாய் வசூலிக்கப்படவும் இல்லை.

அதற்கு மாற்றாக மான்யம் கோவில்களுக்கு வழங்கப்படவும் இல்லை. இவ்விதமாகக் கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த 13,825 ஏக்கர் நிலங்களை 5000 பேர்கள் இன்றும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு ஒவ்வொரு வருடமும் 80 ஆயிரம் மூட்டை நெல் கிடைக்குமாறு இராஜராஜ சோழனால் ஏற்படுத்தப்பட்ட மான்யங்கள் மற்றும் அதன் நிலங்கள் தற்போது கோவில் வசம் இல்லை. அக்டோ பர் 20,1983 அன்று பிரகதீஸ்வரர் ஆலய அர்ச்சகர்கள் "சுவாமி நைய்வேதியத்திற்கு வேண்டிய அரிசி இல்லை.

எங்களுக்கும் பல மாதங்களாகச் சம்பளம் தரவில்லை" என்று கூறி நித்திய பூஜையை நிறுத்தியது வரலாறு ஆகும். கல்பாத்தி தேர், நித்திய பூஜை நிற்காது தொடரும் பொருட்டு ரூ 20,000க்கு விற்கப்பட்டது. இது போன்ற எண்ணற்ற செய்திகளை நாம் எடுத்துச் சொல்வதின் நோக்கம் ஒன்று மட்டும்தான்.

ஆலயங்கள் அர்ச்சகர்கள் கட்டுப்பாட்டில் இருந்தவரை அனுசரிக்கப்பட்ட கோவில் கைங்கரியங்கள் நசித்துப் போனது நடுவில்வந்த சில சட்ட முறைகள் மூலமே ஆகும். ஆலய அனுஷ்டானங்களை முறைப்படுத்துவதின் பொருட்டு அரசு கொண்டுவந்த நடைமுறைகள் அர்ச்சகர்களைக் கடுமையாகப் பாதித்தது மட்டுமின்றிக் காலம், காலமாகப் பின்பற்றி வந்த கோவில் கைங்கரியங்களையும் மிகவும் குறைத்துவிட்டன.

ஆலயச் சீர்கேட்டின் எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் அரசுதான் என்று நாம் குற்றம் சாட்டுவதாகக் கொள்ளக்கூடாது. அர்ச்சகர்களாக உள்ள அனேகம் பேர் சர்ச்சைக்குரிய பல சகவாச தோஷங்களினால் நற்பெயரைக் கெடுத்துக்கொண்டு நாட்டில் வசித்து வருவது நாம் அறிந்ததே.

புனிதமான கர்ப்பகிரஹத்தின் இருபுறமும் பான்பராக் பரவிகிடப்பதும் அதிகாலையில் நீராடி ஆச்சாரமாக ஸ்லோக பஜனை பாடல்கள்சூழ உலக சிந்தனை எதிலும் உள்ளத்தில் செலுத்தாமல் இதுகாறும் இருந்த அர்ச்சகர்களின் குணநலன்கள் விரும்பதகாத பல வெளி வேஷங்களுடன்தான் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

பணத்தை மட்டுமே குறியாக எண்ணி பூஜை பததிகளைக் காற்றில் பறக்கவிட்டு காலட்ஷேபம் செய்யும் கணக்கற்ற குருக்களை நாம் அறிவோம். செல்வம் மிக்கவருக்கும் கல்வி அறிவு இல்லாத கனவாண்கள், அரசியல்வாதிகளுக்கும் வில்லாக வளைந்து பகவானைத் தரிசனம் செய்துவைக்கும் பொல்லாத அர்ச்சகர்கள் நாட்டில் இல்லாமல் இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

இரண்டு பக்க தரப்பு எல்லா நிலை வாதங்களையும் நாம் எடுத்துநோக்கி இயம்பும் கருத்துகளாகச் சிலவற்றை முன்வைக்க விரும்புகிறோம். ஆலயங்கள் நன்றாகப் பராமரிக்கப்படுவதும் முக்கிய நித்திய கைங்கரியங்கள் நில்லாமல் நடைபெறுவதும் முதற்கண் அமுல்படுத்தவேண்டிய முக்கியக் கடமையாகும்.

தினசரி பூஜை முறைகளும் சிறிய கோவில் நடைமுறைகளும் அரசு இயந்திரங்களின் அனாவசிய கட்டுப்பாடும் அரசியல்வாதிகளின் அடாவடித் தலையீடும் இன்றி நடைபெறும் ஒரு நல்ல வழியைக் காணவேண்டும் நாட்டு நலன் கருதியும் ஜனநாயகக் கடமைகளின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கைகளுக்கும்

ஒப்புதல்களுக்கும் உட்பட்டுதான் ஆலயச் சட்டங்கள் அமைய வேண்டும் என்பதில் எதிர்க் கருத்து இருக்க முடியாது. ஆனால் அவ்வித நடைமுறைகள் அர்ச்சகர்களைப் பெரிதும் பாதிக்காத அளவிலும் அவர்களின் நலன்களைக் கருதும் முறையிலும் அமைய வேண்டும். வழி வழியாக வந்த அவர்களின் அனுபவ வார்த்தைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.

ஆந்திர மாநிலத்தில் இதுவரை அமலில் இருந்த அர்ச்சகர் விரோதச் சட்டங்களை மாற்றக்கோரி ஆலயப் பாதுகாப்பு போராட்டத்தின் ஆணிவேராகத் திகழும் திரு. Dr. M.V. சௌந்தரராஜன் என்ற வைணவப் பெருந்தகையின் விடாமுயற்சியால் அம்மாநிலத்தில் 7/2007 Endowment Amendment Bill என்ற பெயரில் புதிதாக ஒரு சிறந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அர்ச்சகர்களையும் ஆலய டிரஸ்டுக்கள் குழுவில் அங்கத்தினர்களாக ஆக்கப்பட்டுள்ள இந்தச் சட்டம் பற்றியும் இதற்கு முன் இருந்த ஆந்திர தமிழக இந்து அற நிலையத்துறை சட்டங்கள் பற்றியும் திரு. சௌந்தரராஜன் எழுதியுள்ள Legislation for Temple Destruction என்ற புத்தகம் இவ் விஷயத்தைப் பற்றிய சிறந்த தகவல் களஞ்சியமாகத் திகழ்கின்றது.

தமிழகமும் இது போன்ற ஒரு சிறந்த சட்ட மாறுதல்களின் விளைவாகச் சரித்திரம் படைக்க வேண்டும் என்பதே நமது விருப்பமும் வேண்டுகோளும் ஆகும். பக்தனுக்கும் பகவானுக்கும் பாலமாகத் திகழும் அர்ச்சகர் நலன் காக்கப்பட்டு அனைவரும் பயன்பெற அந்த ஆண்டவன் துணைபுரிவாராக.

Dr. Prof. M.V. சௌந்தரராஜன் தங்கப் பதக்கம் பெற்று கல்வியில் சிறந்த ஒரு கடும் போராளியாகத் திகழ்கிறார். உஸ்மானியா பல்கலைக்கழக நிர்வாக இயக்குநராக பணியாற்றிய இப்பெரியவர் அகோபிலமட சேவா சமிதி என்ற சமய நிலையத்தின் செயலராகவும் 10 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்து ஐதராபாத் சீனிவாசநகர் காலணியில் குருவாயூரப்பன் ஆலயம் அமைவதில் பெரும் பங்காற்றியவர்.

தெலுங்கான அர்ச்சக சமாயகா என்ற அமைப்பின் தலைவராகவும் ஆந்திர மாநில அர்ச்சக அமைப்பின் துணை தலைவராகவும் தற்போது பணியாற்றும் திரு. சௌந்தரராஜன் ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் கன்வீனராக கடமையாற்றுவது மட்டுமின்றி VAK (Voice of Temples) என்ற தெலுங்கு, ஆங்கில, ஹிந்தி ஆகிய மும்மொழி மாத இதழின் ஆசிரியராகவும் திகழ்ந்து நம் மனதில் நிற்கிறார்.

அர்ச்சகர்களும், ஆலய பாதுகாப்பும்:-courtesy - brahmins today magazine

நூல் வேண்டுவோர் தொடர்புகொள்ள:
Dr. M.V. Soundararajan
2-2-647/77, Srinivasa Nagar Colony
Bagh Amberpet, Hyderabad - 500013 
Tel: 040-27425640